சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் தேவை ஏற்படின் பயணக் கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நத்தார் பண்டிகையின் பின்னர் நாட்டில் கொவிட்-19 தொற்று அதிகரித்திருந்தது.அதற்குக் காரணம், மக்கள் முறையாக சுகாதார வழிமுறைகளை பின்பற்ற தவறியமையே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இராணுவத் தளபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்;
நத்தார் மற்றும் அதன் பின்னர் இருந்த நீண்ட விடுமுறைகளை தொடர்ந்து ஜனவரி மாதத்திலேயே அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
நாடு திறக்கப்பட்டுள்ள போதிலும் சுகாதார வழிகாட்டல்கள், சில கட்டுப்பாடுகள் உள்ளதென இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.
இது இவ்வாறிருக்க, நாட்டில் எதிர்வரும் பண்டிகை காலத்தை அடிப்படையாகக் கொண்டு நாட்டில் விசேட பயணக்கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவது அவசியமானதாக காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசியபோதே குறித்த சங்கத்தின் ஊடகபேச்சாளர் வைத்தியர் சமந்த ஆனந்த இவ்வாறு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.