வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோரை தனிமைப்படுத்துவது தொடர்பான ஒழுங்கு விதிகளில் மாற்றம் மேற்கொள்வதற்கு தேசிய கொவிட் தடுப்பு செயலணியில் ஆராயப்பட்டுள்ளது.
கொவிட் தடுப்பு செயலணி நேற்று மாலை கூடிய போது இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக செயலணியின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி கொவிட் 19 தடுப்பூசிகள் இரண்டையும் போட்டுக்கொண்ட பின்னர் 14 நாட்கள் கழித்து இலங்கை வருபவர்களை தனிமைப்படுத்தாது பிசிஆர் பரிசோதனைக்கு மாத்திரம் உட்படுத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வெளிநாடுகளில் இருந்து வரும் ஏனையோருக்கான தனிமைப்படுத்தல் காலத்தை குறைப்பது தொடர்பாகவும் அவதானம் செலுத்தப்பட்டதாகவும் இது தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விரைவில் அறிவிப்பார் என்றும், இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.