January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை மீதான ஐநா தீர்மானம்; இந்தியாவின் ஆதரவைப் பெறும் புதிய முயற்சியில் பிரிட்டன்

ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீது முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு இந்தியாவின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் புதியதோர் முயற்சியில் பிரிட்டன் இறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனின் தெற்காசிய மற்றும் பொதுநலவாய துறைகளுக்கான அமைச்சர் தாரிக் அஹ்மட் தற்போது இந்தியாவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

அமைச்சர் தாரிக் அஹ்மடின் விஜயத்தில் இலங்கை மீதான ஐநா தீர்மானம் மற்றும் இந்தியாவின் நிலைப்பாடு குறித்தும் உயர்மட்டக் கலந்துரையாடல்கள் இடம்பெறும் என்று நம்பப்படுகின்றது.

அவர் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வி ஷ்ரிங்லா ஆகியோரைச் சந்தித்துள்ளதாகவும் கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை மீதான ஐநா வாக்கெடுப்பில் இந்தியாவின் நிலைப்பாடு தீர்க்கமானதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பிரிட்டன் அமைச்சரின் இந்திய விஜயம் அமைந்துள்ளது.

வாக்கெடுப்பில் இருந்து இந்தியா விலகிக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தியாவின் ஆதரவைப் பெறும் முயற்சியில் பிரிட்டன் இறங்கியுள்ளதாகவும் இராஜதந்திர வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதேநேரம், அண்மையில் இந்திய பிரதமருடன் தொலைபேசி உரையாடலொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, ‘இலங்கை மீதான தீர்மானத்துக்கு எதிராக இந்தியா வாக்களிக்கும்’ என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

(dailymirror.lk- EASWARAN RUTNAM)