November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஐ.நா தீர்மான வரைவு இலங்கையில் ஆட்சி மாற்றத்தினை நோக்காக கொண்டது’

பிரித்தானியா தலைமையிலான கூட்டு நாடுகளால்,  ஐ.நா. மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவானது இலங்கையில் ஓர் ஆட்சி மாற்றத்தை நோக்காகக் கொண்டே  அமைந்துள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இது தமிழர்களது நீதிக்கானதல்ல எனவும் நீதி விசாரணையும் பொறுப்புக்கூறலுக்கான பொறிமுறையினை இலங்கையிடமே கையளிப்பதாக அமைகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜெனிவா, தொடர்பில் ‘தமிழர்களின் நிலைப்பாடு என்ன’ என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற இணையவழி பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐ.நா.வில் நிறையவே ஆதாரங்கள், சாட்சிகள் உள்ள நிலையில், புதிதாக சாட்சியங்கள், ஆதாரங்களை திரட்டுவதற்கான பொறிமுறையினை மீளவும் ஐ.நா ஆணையாளர் அவலுவலகத்திடம் கொடுத்து காலத்தை இழுத்தடிக்கின்ற செயலாக இந்த தீர்மான வரைவு அமைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு நீதித்துறையினை நோக்கிய செயல்முறை தெளிவாக முன்வைக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2014 ஆம் ஆண்டு தீர்மானம் வழங்கிய ஆணைக்கமைய, ஐ.நா ஆணையாளர் அலுவலகம் மேற்கொண்ட விசாரணைகள், சாட்சியங்கள், ஆதாரத் திரட்டல்கள் ஊடாக அமைந்த அறிக்கை, பின்னராக முன்வைக்கப்பட்ட கலப்பு நீதிமன்றம் யாவற்றையும் கடந்து, புதிய தீர்மான வரைவானது நிலைமைகளை மேலும் பின்னோக்கி கொண்டு செல்வதாக அமைந்துள்ளதெனவும் அவர் தெரவித்துள்ளார்.

இதேவேளை, தமிழ் அமைப்புகளால் முன்வைக்கப்பட்ட சில விடயங்கள் மேலோட்டமாக பூச்சுவேலைகள் போல் உள்ளடக்கப்பட்டுள்ளதன்றி, பாதிக்கப்பட்ட மக்களது அடிப்படைக் கோரிக்கைகளை கவனத்தில் கொண்டுள்ளதாக தீர்மான வரைவு அமையவில்லை எனவும் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.