குற்றவாளி என்று நிருபிக்காமலேயே அரசாங்கம் தனது சகோதரரை கைதுசெய்து 5 மாதங்கள் சிறையில் அடைத்து வைத்திருந்து விடுவித்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீனின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று விடுவிக்கப்பட்டார்.
அது தொடர்பில் வவுனியாவில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார் ரிஷாத் பதியுதீன்.
“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட இபராகிம் என்ற வர்த்தகர் எனது சகோதரர் ரியாஜ் பதியுதீனுக்கு 7 முறை தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியிருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரைக் கைதுசெய்திருந்தனர்.
இரு தினங்களில் விடுவிக்கப்படுவார் என்று அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழே அவர் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.
என்னுடைய சகோதரர் நிரபராதி, எந்தக் குற்றங்களுடனும் தொடர்புடையவர் அல்லர் என்று நான் முன்னரே சொல்லியிருந்தேன்.
எவ்வாறான விசாரணைகளுக்கும் அவர் ஒத்துழைப்பை வழங்குவார் என்றும் சொன்னேன்.
அந்தவகையில் 5 மாதங்கள் கழித்து எந்தக் குற்றங்களுடனும் அவருக்கு தொடர்பில்லை என்ற வகையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஒரு சம்பவத்துக்காக விசாரணை மேற்கொள்ளும்போது குற்றவாளியாக இருந்தால்தான் சிறையிலே அடைப்பது வழமை என்று சட்டத்தரணிகள் சொல்கின்றார்கள்.
அதற்கு நேர்மாறாக குற்றவாளி என்று நிரூபிக்க முன்னரே அவர் கைதுசெய்யப்பட்டு 5 மாதங்கள் சிறையிலே அடைக்கப்பட்டார்.தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். அந்தவகையில் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் பாரதூரமானது. பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பலர் காயமடைந்திருக்கிறார்கள்.
எனவே, அந்த விசாரணைகளுக்கு ஒத்துழைக்க வேண்டியது நாட்டின் பிரஜைகளின் கடமை. அதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
அந்த விடயத்துக்கு எனது சகோதரரோ அல்லது நானோ இடைஞ்சலாக இருக்கமாட்டோம்” என்றார்.