மன்னாரில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணிகளை ஏற்றிச்சென்ற தனியார் பஸ் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அனுராதபுரத்தில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த புகையிரதத்துடன் குறித்த பஸ் இன்று மதியம் அளவில் தலைமன்னார் பியர் பகுதியில் வைத்து மோதுண்டுள்ளது.
இந்த சம்பவத்தின் போது, பஸ்ஸில் பயணித்த 9 வயது பாடசாலை மாணவன் உயிரிழந்ததுடன், காயமடைந்த பாடசாலை மாணவர்கள், பயணிகள் உட்பட 25 பேர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தின் போது 20 பாடசாலை மாணவர்கள் உட்பட 30 பயணிகள் பஸ்ஸில் பயணித்துள்ளனர்.
காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், குருதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் உடனடியாக குருதி வழங்க விரும்புபவர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையுடன் தொடர்புகொள்ளுமாறு வைத்தியசாலை நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த விபத்தின் போது குறித்த பஸ் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது. பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துனரை தலை மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாதுகாப்பற்ற புகையிரத கடவையைக் கடக்க முயன்ற போதே மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளதாக தலை மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.