November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சமூகங்கள் மீதான ஒடுக்குமுறைகளை தொடர்ந்துகொண்டு ஜெனிவாவில் எவ்வாறு வெல்ல முடியும்?’

புர்காவை தடைசெய்யும் தீர்மானத்தை அரசாங்கம் உடனடியாக வாபஸ்பெற வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இனவாதிகளை திருப்திப்படுத்தும் இவ்வாறான செயற்பாடுகள் சர்வதேச நாடுகளிடமிருந்து எமது நாட்டை தனிமைப்படுத்தும் சூழலை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புர்காவை தடை செய்வது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

”முஸ்லிம்களை இலக்கு வைக்கும் இவ்வாறான நிகழ்ச்சி நிரல்களை, அரசாங்கம் கைவிடுவதாக தெரியவில்லை.ஆட்சிக்கு வர உதவிய இனவாதிகளை திருப்திப்படுத்தவே இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகிறது.

அத்தோடு கொரோனா சூழ்நிலையில் முகக்கவசம், மூக்கை மறைத்தல் என்பன கடைப்பிடிக்கப்படும் காலமிது. இதைக் கூட புரிந்துகொள்ளாமல், முஸ்லிம்களை பழிவாங்கும் மனநிலையில்தான் இந்த அரசு நடந்துகொள்கிறது.

மேலும் அரபு நாடுகளின் நண்பன் எனக் கூறும் இந்த அரசாங்கம், அரபு நாடுகளிலும் முஸ்லிம் உலகிலும் விரும்பப்படும் ஆடைகளுக்கு அடிப்படைவாதச் சாயம் பூசுவது விந்தையும் வேடிக்கையாகவும் உள்ளது.

இறுதிக்கட்ட யுத்தத்திலும் கூட, புர்கா மற்றும் ஹிஜாப் போன்ற முஸ்லிம்களின் கலாசார ஆடைகளுக்கு தடை விதிக்கப்படவில்லை.

இதேவேளை, தங்களுக்குப் பிடிக்காத ஒருசில அரசியல்வாதிகளை பழிதீர்ப்பதற்காக, ஒட்டுமொத்த முஸ்லிம்களின் கலாசார நம்பிக்கையை கொச்சைப்படுத்துவதா? சமூகங்கள் மீதான ஒடுக்கு முறைகளைத் தொடர்ந்துகொண்டு ஜெனிவாவில் எவ்வாறு வெல்ல முடியும்?எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

அதேநேரம் ‘இந்தத் தடை வருமாக இருந்தால், முஸ்லிம் நாடுகளிலிருந்து மட்டுமல்ல, முகத்தை மறைக்கும் எந்தவொரு முஸ்லிம் பெண்ணும், சுற்றுலாப்பயணியாக இலங்கைக்கு வரப்போவதில்லை.

எமது நாட்டின் சுற்றுலாத்துறையில் இது பாதிப்பை ஏற்படுத்தி, அந்நிய செலாவணியில் பாரிய தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ளல் அவசியம்’ எனவும் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.