தமிழ் மக்கள் மீதான பொறுப்புக்கூறலுக்கு மிகப் பெரும் சவாலாக இருக்கக்கூடிய ஐநா 46/1 தீர்மானத்தை அம்பிகை அம்மையாளர் வரவேற்றுள்ளமை பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரோகம் இழைக்கும் செயலாகும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அம்பிகை செல்வகுமார் லண்டனில் நான்கு கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பித்த உணவுத் தவிர்ப்புப் போராட்டம், நேற்று 17 ஆவது நாளில் முடிவுக்கு வந்தது.
அம்பிகை செல்வகுமார் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை நிறைவு செய்யும் போது முன்வைத்த கருத்துக்களுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கண்டனங்களை வெளியிட்டுள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு இலங்கை பாரப்படுத்தப்பட வேண்டும், சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறை ஒன்று வேண்டும், இலங்கை தொடர்பாக ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் விசேட தூதுவர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைத் தீர்மானிக்கும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பனவே அம்பிகையின் நான்கு அம்சக் கோரிக்கையாகும்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அம்பிகையின் கோரிக்கைகளில் உடன்பட்டிருந்ததாகவும், அம்பிகை உணவுத் தவிர்ப்பை நிறைவு செய்யும் போது தெரிவித்த கருத்துக்கள் பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்றுவதாக அமைந்துள்ளதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொறுப்புக்கூறலை ஐநா மனித உரிமைகள் பேரவையில் இருந்து வெளியே எடுத்து, சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையின் ஊடாக பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று உறுப்பு நாடுகளிடம் தாம் வலியுறுத்தி வரும் நிலையில், அம்பிகை 46/1 தீர்மானத்தை வரவேற்றுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஐநா பேரவையினுள் உள்ள சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறை மூலம் பாதிக்கப்பட்ட மக்கள் எதனையும் அடைந்துகொள்ளப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘தீர்மான வரைவில் உள்ள சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறை குறித்த விடயங்கள் போதாது’ என்று கூறி போராட்டத்தை ஆரம்பித்த அம்பிகை அம்மையார், இறுதியாக வெளியான வரைவில் உள்ள ‘பலவீனமான சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறைக் கட்டமைப்பைக் காட்டி’ போராட்டத்தைக் கைவிட்டது ஏமாற்றமளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பிகை செல்வகுமார் உண்மையான உணர்வுகளுடன் போராட்டத்தை ஆரம்பித்த நிலையில், சுற்றி இருந்தவர்கள் அவரைத் தவறாக வழிநடத்தியுள்ளதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
‘அம்பிகை இறுதியாகத் தெரிவித்த கருத்துக்கள் ஆபத்தானவை! உண்மைக்குப் புறம்பானவை! மக்கள் அவற்றைப் புறக்கணிக்க வேண்டும்! என்றும் அவர் எச்சரித்துள்ளார்.