January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட வேண்டும்’: ஐநாவில் வேலன் சுவாமிகள்

போர்க்குற்றங்கள், மனித நேயத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழ் இன அழிப்புக்கு எதிராக இலங்கை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட வேண்டும் என்று பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பித்து உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிறுத்துவதற்கு ஐநா உறுப்பு நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கையில் தமிழ் மக்கள் 70 வருடங்களுக்கு மேலாக சுய நிர்ணய உரிமைக்காக போராடி வருவதாகவும், நாட்டின் சிங்கள- பௌத்த அரசாங்கம் தொடர்ந்தும் தமது உரிமைகளை நசுக்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த நிலைமையிலும், தமிழ் மக்கள் இராணுவ அடக்குமுறைகளுக்கு உள்ளாகி வருவதாகவும், அதனை முடிவுக்குக் கொண்டு வருவதை வலியுறுத்தி தாம் பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பேரணி சென்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.