பொது இடங்களில் முகத்தை மறைக்கும் புர்கா அணிவதை தடை செய்வது தொடர்பாக தொடர்ந்தும் கலந்துரையாடப்பட்டு வருவதாக அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அதனை தடை செய்வது தொடர்பாக இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றும், அது தொடர்பாக நன்கு ஆராய்ந்த பின்னரே தீர்மானிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
புர்காவை தடை செய்வதற்கான அமைச்சரவை பத்திரத்தில் தான் கையெழுத்திட்டுள்ளதாகவும், இந்த வார அமைச்சரவை கூட்டத்தில் அது சம்பிக்கப்படும் என்றும், கடந்த வாரம் நிகழ்வொன்றில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்திருந்தார்.
எனினும் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அவ்வாறான அமைச்சரவை பத்திரங்கள் எதுவும் சமர்பிக்கப்படவில்லை என்று அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த அமைச்சர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களினால் கேள்வியெழுப்பப்பட்டது.
இதன்போது பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல, அந்த விடயம் தொடர்பாக தொடர்ந்தும் கலந்துரையாடப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.
தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்பதனால் புர்காவுடன் நிகாப்பையும் தடை செய்ய யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. அது தொடர்பாக ஆராய்ந்து தீர்மானங்கள் எடுக்கப்படும் என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.