January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கடத்தல்கள்,படுகொலைகள் தொடர்பான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன’; கண்டியைச் சேர்ந்த நபர் யாழில் போராட்டம்

கண்டியைச் சேர்ந்த டீமன் ஆனந்த என்பவரினால்  யாழ்ப்பாணம், சுப்ரமணியம் பூங்கா முன்றிலில் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கும், கடத்தி படுகொலை செய்யப்பட்டோருக்கும் என்ன நடந்தது? என இந்த அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் எனவும் யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் இந்த அரசாங்கம் பொறுப்புக் கூறவேண்டும் என வலியுறுத்தியும் இந்தப் போராட்டத்தில் அவர் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது இலங்கையில் குறிப்பாக வடக்கில் பல இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் இந்த அரசாங்கம் உண்மையை வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கடத்தல்கள், படுகொலைகளில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் என்னிடம் பல ஆதாரங்கள் உள்ளன, அந்த ஆதாரங்களை ஜெனீவாவிலும் சமர்ப்பிக்கவுள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது படுகொலைகள் மற்றும் கடத்தல்களில் ஈடுபட்டவர்கள் தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் மாகாண சபை உறுப்பினர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்ய வேண்டும். அதற்கு இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் பலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு நீதி வேண்டும்.எனினும் நான் தமிழ் மக்களுக்கு எதிராக இந்த போராட்டத்தில் ஈடுபடவில்லை, இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கும் உண்மை விடயம் தொடர்பில் சரியான தெளிவுபடுத்தல் வேண்டும் என்பதற்காகவே நான் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன். இந்த போராட்டம் தமிழ் மக்களுக்கு எதிரான போராட்டம் என நினைக்காதீர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.