November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

17 நாட்களின் நிறைவில் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார் அம்பிகை

பிரித்தானிய அரசிடம் 4 அம்சக் கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி கடந்த 17 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த அம்பிகை செல்வகுமார் தன்னுடைய போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ளார்.

அம்பிகை செல்வகுமார் முன்வைத்த கோரிக்கைகளில் ஒன்றை முழுமையாகவும் இன்னொன்றை அண்ணளவாகவும் நிறைவேற்றுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், பிரித்தானிய அரசாலும், நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் அனைத்து தமிழ் மக்களாலும் போராட்டத்தை நிறுத்திக்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் தன்னுடைய போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளதாக அவரது போராட்டத்துடன் தொடர்புடைய செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

அவர் முன்வைத்த அனைத்துலக சுயாதீன விசாரணை பொறிமுறையை உருவாக்குதல் , அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை பாரப்படுத்துதல் , இலங்கைக்கான தனியான அறிக்கையாளரை நியமித்தல் மற்றும் வடக்கு-கிழக்கு மாகாணத்தில் கருத்து கணிப்பு வாக்கெடுப்புக்காக ஐ.நா. பரிந்துரைத்தல் ஆகிய நான்கு அம்சக் கோரிக்கைகளில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் இறுதி வரைபில் அனைத்துலக சுயாதீன விசாரணைப் பொறிமுறை என்பது உள்ளடக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நிரந்தர ஐ.நா. கண்காணிப்பாளருக்கு பதிலாக, தொடர்ச்சியான கண்காணிப்பு நடைமுறை என்ற ஏற்பாடு சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய கடந்த 17 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த அம்பிகை செல்வகுமார், தனது போராட்டத்தில் வெற்றிகண்டு இன்று பிரித்தானிய நேரம் பி.ப. 3.00 -5.00 மணியளவில் தனது உண்ணாவிரதத்தை, மத தலைவர்கள் மற்றும் அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் முடித்துக்கொள்ள முடிவு செய்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.