July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சர்வதேசத்திடம் நீதியை எதிர்பார்ப்பது இலங்கையை காட்டிக் கொடுப்பதற்கு ஒப்பானது ;பேராயரின் கருத்துக்கு சரத் வீரசேகர பதில்

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இலங்கையின் நீதித்துறை சுயாதீனமாகவே இயங்குகின்றது. இங்கு என்ன பிரச்சினைகள் இடம்பெற்றாலும் அதற்கு உள்நாட்டு நீதித்துறை நீதியை வழங்கியே தீரும். அதைவிடுத்து சர்வதேசத்திடம் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நீதியை எதிர்பார்ப்பது நாட்டைக் காட்டிக் கொடுப்பதற்கு ஒப்பானதாகும்’ என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

‘ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் நீதியைப் பெற்றுத் தருவோம் என்று நாட்டு மக்களுக்கு அரசு உறுதியளித்திருந்தது. எனவே,அரசியல் நலன் கருதி குற்றவாளிகளைப் பாதுகாக்கும் விதத்தில் அரசு செயற்பட்டால் நாம் சர்வதேச நீதிமன்றத்தின் உதவியை நாட நேரிடும் என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன்’ என்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கடந்த நல்லாட்சி அரசின் காலத்தில்தான் ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்றது.உலக பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.அமைப்பின் இஸ்லாமிய அரசு அமைக்கும் நோக்குடனேயே இலங்கையிலும் தாக்குதல் நடத்தப்பட்டது.

கடந்த ஆட்சியில் தேசிய பாதுகாப்பு பலவீனமாக இருந்த காரணத்தாலேயே இங்கு தாக்குதலை சஹ்ரான் குழுவினர் இலகுவாக நடத்தினர்.

எமது அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மறைந்திருந்த ஈஸ்டர் தின தாக்குதலுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புபட்டவர்களை கைதுசெய்தோம்.

எனவே, இந்தத் தாக்குதலுடன் தொடர்புபட்ட அனைவருக்கும் தண்டனையை நிச்சயம் வழங்குவோம். பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ மக்களுக்கு நீதி கிடைத்தே தீரும்.

இதைவிடுத்து சர்வதேசத்திடம் பேராயர் நீதியை எதிர்பார்ப்பது நாட்டை காட்டிக் கொடுப்பதற்கு ஒப்பானதாகும்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.