அரசியல் நோக்கங்களை அடைந்துகொள்ள சில நாடுகள் மனித உரிமை என்ற பெயரில் மாய வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச பௌத்த அமைப்பொன்று ஐநா பேரவையில் குற்றம்சாட்டியுள்ளது.
சர்வதேச பௌத்த அமைப்பொன்றின் பிரதிநிதி ஒருவர் ஐநா மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றும் போதே, இதனைத் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் பேரவை இலங்கை மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இருந்தாலும், அவை ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையில் இறுதி யுத்தத்தின் போது, 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தாலும், விடுதலைப் புலிகளின் படைவீரர்கள் மற்றும் சிவில் மக்களை வேறு பிரித்துக் காட்டத் தவறியுள்ளதாகவும் குறித்த அமைப்பின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் இரண்டு அரச தலைவர்கள் உட்பட இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஒருவரையும் படுகொலை செய்த பயங்கரவாத அமைப்பு என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் சிறுவர்களை தற்கொலைப் படையில் இணைத்துக்கொண்ட என்டன் பாலசிங்கத்துக்கு பிரிட்டன் புகலிடம் அளித்ததாகவும் குறித்த பௌத்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
உலகின் சில நாடுகள் மனித உரிமை மீறல்களின் கல்லறையாக இருக்கும் நிலையில், மனித உரிமைகளைப் பாதுகாக்க முயற்சிக்கின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.