‘ஒவ்வொரு வருடமும் ஜெனீவாவுக்குச் சென்று கடிதம் ஒன்றை எழுதிவிட்டு,சொப்பிங், சாப்பாடு என ஊர் சுற்றி மக்களை ஏமாற்றித்தான் சரத் வீரசேகர வாக்குகளைப் பெற்றுக்கொண்டார்’ என ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும், கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாம் ஆண்டு நிறைவு வைபவம் கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் இடம்பெற்றது.
இந்த வைபவத்தில் கலந்துகொண்டு பேசிய சரத் பொன்சேகா, விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகிய இருவரதும் தேசியப்பற்று, சரத் வீரசேகரவின் ஜெனீவா பயணம், இலங்கையர்களுக்கான இராணுவ பயிற்சி குறித்து பல முக்கிய விடயங்கள் தொடர்பில் பேசினார்.
இங்கு தொடர்ந்து பேசிய அவர்;
“இந்த அரசாங்கத்தில் நாட்டுப்பற்று,தேசியவாதம் தொடர்பில் பேசுகின்ற சிலர் இருக்கிறார்கள். விமல் வீரவன்ச, உதய கம்மன்பில இருவரும் நாங்கள் யுத்தம் செய்த காலத்தில் ஒரு தண்ணீர் போத்தலைக்கூட அனுப்பவில்லை. இராணுவ வீரர்களுக்காக இரத்ததானம் செய்வதற்கு கூட முன்வரவில்லை. குறைந்தபட்சம் பொலன்னறுவை, அநுராதபுரத்தையாவது கடந்து வந்தது கிடையாது. ஆனால், கொழும்பில் இருந்து கொண்டு தேசப்பற்றையும், நாட்டுப்பற்றையும் பேசி மக்களை ஏமாற்றி வருகின்றார்கள்.
மத்திய வரிசை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் கொழும்பில் வாழ்கிறார்கள். அவர்கள் நாட்டை மிகவும் நேசிக்கிறார்கள். ஆனால், அந்த எருமை மாடுகள் இங்குள்ள அப்பாவி மக்களிடம் தேசியத்தைப் பற்றி பேசிப் பேசி மக்களை ஏமாற்றி வருகின்றார்கள்.
முதலில் விமல் வீரவன்சவிடம் ஏமாற்றம் அடைந்தார்கள். தற்போது சரத் வீரசேகரவை களத்துக்கு கொண்டு வந்துள்ளார்கள். அவரும் தேசியப்பற்று உடையவர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். ஓவ்வொரு வருடமும் ஜெனீவாவுக்குச் செல்வதற்கு அங்குள்ள யாராவது ஒருவர் விமான டிக்கெட்டை அனுப்பி வைப்பார். அங்கு சென்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கடிதமொன்றை போட்டுவிட்டு வருவார். அவருக்கு ஆணையாளரை சந்திப்பதற்கான வாய்ப்பும் கிடைக்காது.
அதன்பிறகு சொப்பிங் செய்விட்டு யாருடையதாவது வீட்டில் நன்றாக சாப்பிட்டு விட்டு நாட்டுக்கு வந்துவிடுவார். இவையனைத்தையும் நம்பி மக்கள் அவருக்கு வாக்களித்துள்ளார்கள். உண்மையில் சரத் வீரசேகரவின் இந்த செயல் மிகவும் கவலையளிக்கிறது. இவ்வாறான ஏமாற்றுக்காரர்களின் உண்மை முகத்தை குறிப்பாக கொழும்பில் உள்ள மக்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
தற்போது இந்த நாட்டில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. சரத் வீரசேகர உங்கள் அனைவருக்கும் ஆறு மாதங்கள் இராணுவ பயிற்சி அளிக்கப் போவதாக தெரிவித்திருந்தார். எனவே, இப்போது முதல் அனைவரும் நன்றாக உங்களது உடம்புகளை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ளுங்கள்.
அதன்பிறகு தலைமைத்துவ பயிற்சி தான் வழங்கப்படும் என அவர் சொல்லியிருந்தார். அதில் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும், மீசையை எவ்வாறு கத்தரிப்பது, அதிகாலையில் எழும்புவது, நெஞ்சை நிமிர்த்தி வைப்பது எவ்வாறு உள்ளிட்ட விடயங்கள் தான் இராணுவ பயிற்சி முகாமில் சொல்லிக் கொடுப்பதாக அவர் சொல்லியிருந்தார்.
இன்று இந்த நாட்டில் வன்முறைகள் அதிகரித்துவிட்டன. ஜனாதிபதித் தேர்தலின் பிறகு பௌத்த துறவியொருவர் கொலை செய்யப்பட்டார். இன்று வரைக்கும் அந்த கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. பொதுத் தேர்தலின் பிறகு 3 பிக்குகள் கொலை செய்யப்பட்டார்கள். ஆரம்ப காலத்தில் பாதாள உலகத்தைச் சேர்ந்தவர்கள் தான் இவ்வாறான கொலைகளை செய்தார்கள் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் சரத் வீரசேகர, பாதாள உலகத்தைச் சேர்ந்தவர்களிடம் உள்ள ஆயுதங்களை ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டார்.அவ்வாறு சொன்ன மறுநாளே பாணந்துறையில் பட்டப் பகலில் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்று ஒருவர் உயிரிழந்தார்.
எனவே, இந்த நாட்டில் பாதாள உலகத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. போதைப் பொருள் கடத்தல்காரர்கள் இல்லை என சரத் வீரசேகர பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார்.
ஆனால், தற்போது சொல்வதற்கு கவலையாக இருந்தாலும், இராணுவ வாகனங்களிலும் போதைப் பொருள் கொண்டு செல்லப்படுவதை அறிய முடிகின்றது. அவ்வாறான மோசமான ஒரு நிலைக்கு நாடு தள்ளப்பட்டு விட்டது.
எனவே, நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து, நன்றாக சிந்தித்து செயற்பட்டு, ஒரு மனதுடன் வேலை செய்யுங்கள் என நான் சரத் வீரசேகரவிடம் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.