பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை நிர்ணயித்து அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக பெருந்தோட்ட நிறுவனங்களால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக அறிவிக்குமாறு அந்த மனுவின் ஊடாக பெருந்தோட்ட நிறுவனங்கள் நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டுள்ளன.
தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 900 ரூபா அடிப்படை சம்பளம் மற்றும் 100 ரூபா வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு அடங்கலாக 1000 ரூபாவை வழங்க வேண்டுமென்று சம்பள நிர்ணய நிர்ணய சபையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை அறிவித்து, கடந்த வாரத்தில் தொழில் ஆணையாளரினால் விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டது.
ஆனால், தம்மால் ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்க முடியாது என்று உறுதியாக இருக்கும் பெருந்தோட்ட நிறுவனங்கள் இன்று நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்துள்ளன.
மனுவின் பிரதிவாதிகளாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபாடி சில்வா, தொழில் ஆணையாளர் உள்ளிட்ட 18 பேர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.