
மியன்மாருக்கான இலங்கை தூதுவர் பேராசிரியர் நலின் டி சில்வா, “வேலை செய்ய முடியாத தூதுவர்” என்ற தலைப்பில் தமது பிரத்தியேக பேஸ்புக் பக்கத்தில் உருக்கமான பதிவொன்றை விடுத்துள்ளார்.
இலங்கை மீனவர்கள் 12 பேர் தற்போது மியன்மாரில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் தம்மால் செயற்பட முடியாமை தமது இயலாமையை வெளிப்படுத்துவதாக அவர் குறித்த பவில் தெரிவித்துள்ளார்.
“மியான்மாருக்கான தூதராக என்னை நியமித்து ஜனாதிபதி மிகப் பெரிய தவறு செய்ததாகத் தெரிகிறது. எங்கள் தூதரகங்கள் சேவை செய்வது இல்லையென பத்திரிகையாளர்கள் கூறுவது இருநூறு சதவீதம் உண்மை” எனவும் பதிவிட்டுள்ளார்.
இதன் காரணமாக தாம் மியன்மாருக்கான இலங்கை தூதுவர் பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தாம் முகம் கொடுத்துள்ள நெருக்கடி தொடர்பிலும் பேராசிரியர் நலின் டி சில்வா குறித்த பதிவில் விபரித்துள்ளார்.
எனினும், இலங்கை மீனவர்கள் 12 பேர் தற்போது மியன்மாரில் கைது செய்யப்பட்டுள்ள பிரச்சினை தீர்க்கப்படும் வரையும் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் பிம்ஸ்டெக் மாநாடு இடம்பெறும் வரையிலும் தாம் பதவியில் தொடர எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் மியன்மார் அரசாங்கத்தினால் இலங்கை தூதரகத்திற்கு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ச்சியான முயற்சியின் பலனாக, பொலிஸ் அதிகாரி ஒருவரினூடாக ஒரே ஒரு முறை மாத்திரம் மீனவர்வகளுடன் பேசுவதற்கு வாய்ப்பு கிட்டியதாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் பேராசிரியர் நலின் டி சில்வா தெரிவித்துள்ளார்.
அவர்கள், மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் இருப்பதாகவும், வழங்கப்பட்ட உணவுகளை உண்ண முடியவில்லை என்று கூறியதாகவும் அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பெப்ரவரி மாதம் அளவில் காணாமல் போன மீனவர்களை தற்போது தான் கண்டு பிடிக்க முடிந்துள்ளதாகவும் உத்தியோகப்பூர்வமாக தமக்குத் தெரிந்தவர்கள் எவரும் மியன்மாரில் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த இடத்தில் தாம் ஒரு தோல்வியடைந்த தூதுவர் என ஒப்புக்கொள்வதாக கூறியுள்ள அவர், தாம் ஒரு திறமையற்றவர் என்றும் தெரிவித்துள்ளார்.
எனினும், தூதரகத்தினால் முடியாத போதிலும் இலங்கையில் உள்ள ஒருவர் மீனவர்களைத் தொடர்பு கொண்டுள்ளதாகவும் அவர்களுக்கு உதவியுள்ளதாகவும் பேராசிரியர் நலின் டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த மாதம், மகா சங்கம் 60 வயதுக்கு மேற்பட்டவர்களைத் தூதர்களாக நியமிக்க வேண்டாம் என்று ஜனாதிபதிக்கு அறிவுறுத்தியது. அவரைப் பொறுத்தவரை, பௌத்த தத்துவத்தை அறிந்தவர்களே மியான்மார் மற்றும் தாய்லாந்தின் தூதர்களாக நியமிக்கப்பட வேண்டும் என பேராசிரியர் நலின் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இந்த எல்லா காரணிகளையும் கருத்தில் கொண்டு, தாம் தூதர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக அவர் தமது பதிவில் மேலும் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், மீனவர்களை விடுவிப்பது தொடர்பில் மியன்மார் அரசாங்கத்தின் அதிகாரிகள் மட்டத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் பேராசிரியர் நலின் டி சில்வா தமது பதிவின் முடிவில் தெரிவித்துள்ளார்.