January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மரண சடங்குகளின் போது சினிமா படல்களை இசைக்கத் தடை: கரைச்சி பிரதேச சபை தீர்மானம்

அண்மைக் காலமாக கிளிநொச்சியில் மரண சடங்கு நிகழ்வுகள் மற்றும் ஊர்வலங்களில் முகம் சுழிக்கும் வகையிலான பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்டு மரண நிகழ்வுகளின் போது பின்பற்ற வேண்டி புதிய நடைமுறைகளை அமுல்படுத்த கரைச்சி பிரதேச சபை தீர்மானித்துள்ளது.

இதற்கமைய மரண சடங்குகள் தொடர்பில் பிரதேச சபையினால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய நடைமுறைகள் ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வருவதாக கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமலிகிதன் கூறியுள்ளார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மரண ஊர்வலத்திற்கு மாறாக களியாட்ட நிகழ்வுகள் போன்றதொரு தோற்றப்பாட்டினை மரண ஊர்வலங்களில் காண முடிகின்றது என தெரிவித்துள்ள அவர் இவற்றை கட்டுப்படுத்தவும், மரண நிகழ்வுகளை முறையான வகையில் முன்னெடுக்க புதிய விதிமுறைகளை முன்னெடுக்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இவ் புதிய விதிமுறைகளை ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தவும், மீறுபவர்களிற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தவிசாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கு அமைவாக மரண நிகழ்வின் போது தகன அல்லது இடுகாட்டிற்கான அனுமதி பெறப்பட வேண்டும் என்பதுடன், அதனை உயிரிழந்தவரின் நெருங்கிய உறவினரே பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு அனுமதியை பெற்றுக்கொண்டவரே மரண சடங்குகளின் போது பின்பற்றவேண்டிய ஒழுக்க விதிகளுக்கு பொறுப்பானவராக கருதப்படுவார் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மரணித்தவரின் உடலை இறுதி நிகழ்விற்காக எடுத்து செல்லும் சந்தர்ப்பத்தில் குறுந்தூர தகன சாலை அல்லது இடுகாட்டுக்கான வழித்தட அனுமதியைபெற்றிருக்க வேண்டும் என்றார்.

மரண சடங்கு இடம்பெற்ற பகுதியிலும், இறுதி நிகழ்வுக்காக எடுத்துச் செல்லப்படும் போது அனுமதியளிக்கப்பட்ட 3 இடங்களிலும், இறுதி நிகழ்வு இடம்பெறும் பகுதியிலும் மாட்டுமே ஒவ்வொரு முறை வெடி கொழுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மரண ஊர்வலங்கள் மற்றும் இறுதி நிகழ்வுகளில் மரண நிகழ்விற்கான பறை இசை மீட்பவர்களுக்கான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தர்ப்பங்களில் சினிமா பாடல்களையும், துள்ளிசை பாடல்களையும் இசைக்க கூடாது. மீறினால் குறித்த வாத்திய கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி இரத்து செய்யப்படும் என அவர் கூறியுள்ளார்.

மரண நிகழ்வுகள் அனுமதி பெற்றுக்கொள்பவரால் நடத்தப்பட வேண்டும் மேலும் காலை 7 மணி தொடக்கம், பிற்பகல் 7 மணிவரை தகனம் மற்றும் புதைப்பதற்கான அனுமதி காணப்படுவதாகவும், குறித்த நேரம் தவிர்ந்த வேறு சந்தர்ப்பங்களில் விசேட அனுமதி பெறப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவை அனைத்தும் பிரதேச சபை சட்ட ஒழுங்கு கோவைக்கு அமைவாக காணப்படுவதால் மரண நிகழ்வு ஒன்றுக்கு அனுமதி பெற்றுக்கொண்டவரே அத்தனைக்கும் பொறுப்புடையவர் ஆவார்.

இவ்விடயம் தொடர்பில் பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்படும் எனவும் மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியும் எனவும் தவிசாளர் அருணாசலம் வேழமலிகிதன் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது உள்ள கலாச்சார சீரழிவுகள், பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு பிரதேச சபையினால் இவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் எனவும் அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.