இலங்கையில் நிகாப் மற்றும் புர்கா மீதான தடை உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் மற்றும் இலங்கை முஸ்லிம்களின் உணர்வுகளை காயப்படுத்தும் ஒரு சம்பவம் என இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாத் கட்டாக் தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
‘இலங்கையில் புர்கா மீதான தடை உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களின் உணர்வுகளுக்கும், இலங்கையில் உள்ள முஸ்லிம்களின் உணர்வுகளுக்கும் காயத்தை ஏற்படுத்தும்.
சர்வதேச அரங்குகளில் நாடு எதிர்கொள்ளும் தொற்றுநோய் மற்றும் பிற சவால்களால் பொருளாதாரம் பாரிய நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில், பாதுகாப்பு என்ற பெயரில் இத்தகைய பிளவுபடுத்தும் நடவடிக்கைகள், பொருளாதார சிக்கல்களை அதிகரிப்பதைத் தவிர, அடிப்படை மனித உரிமைகள் குறித்த பரந்த அச்சங்களை மேலும் வலுப்படுத்த மட்டுமே உதவும்’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு காரணமாக, புர்கா மற்றும் நிகாப் ஆகியவற்றை தடை செய்வதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்த நிலையில், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, புர்காவை தடைசெய்யும் அமைச்சரவை பத்திரத்தில் தான் கையெழுத்திட்டதாக கடந்த சனிக்கிழமை தெரிவித்திருந்தார்.
அத்துடன்,அமைச்சரவை கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பான ஆவணம் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இது இவ்வாறிருக்க, ஹிஜாப்பினை தடை செய்யும் நோக்கம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஹிஜாப்பினால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை என்பதால் அதனை தடை செய்யும் நோக்கம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், அனுமதி கிடைத்ததும் புர்காவும், நிகாப்பும் தடை செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.