November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ரிஷாட், அசாத் சாலி உள்ளிட்டோரே ஈஸ்டர் தாக்குதலின் மறைமுக சூத்திரதாரிகள்’: விஜயதாச எம்.பி. குற்றச்சாட்டு

ஈஸ்டர் தாக்குதலுக்கு முஸ்லிம் அரசியல் தலைவர்களான ரிஷாட் பதியுதீன், அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் மறைமுகமாகத் துணைபோனதாக  ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்‌ஷ  குற்றம்சாட்டியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கை மீதான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையிலேயே, விஜயதாச ராஜபக்‌ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, ‘நல்லாட்சி அரசாங்கம் முஸ்லிம் வாக்குகளை இழந்துவிடும் என்ற ஒரே காரணத்திற்காக கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த 17 முஸ்லிம் உறுப்பினர்களின் ஆலோசனைகளுக்கு அமைய என்னை அமைச்சரவையில் இருந்து வெளியேற்ற அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்தார்’ என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

நீதி அமைச்சில் இருந்து விஜயதாச ராஜபக்‌ஷவை விலக்காவிட்டால், தாம் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதாகவும் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் ரணிலுக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அடிப்படைவாதிகளின் கோரிக்கைகளுக்கு தலைசாய்த்து, தன்னை அரசாங்கத்தில் இருந்து வெளியேற்ற அப்போதைய பிரதமர் ரணில் நடவடிக்கை எடுத்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.