November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிராண்ட்பாஸ் தீ விபத்து: பாதிக்கப்பட்ட பகுதிக்கு எதிர்க்கட்சித் தலைவர் விஜயம்

கொழும்பு,கிராண்ட்பாஸ் – கஜிமாவத்தையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து இடம்பெற்ற பகுதிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் மேல் மாகாணசபை உறுப்பினர் பாயிஸ் ஆகியோர் நேரடியாகச் சென்று பார்வையிட்டுள்ளனர்.

அத்துடன், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தீயினால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரடி விஜயம் செய்து அங்குள்ள தற்போதைய நிலைவரம் குறித்து பாதிக்கப்பட்ட மக்களிடம் கேட்டறிந்துள்ளார்.

இதன்போது கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களான பால சுரேஷ், மஞ்சுளா, அமைப்பாளர் பத்மநாதன் ஆகியோரும் பாதிக்கப்பட்ட பகுதிக்குச் சென்று பார்வையிட்டுள்ளனர்.

இதனிடையே, கஜிமாவத்தை பகுதியில் சுமார் 250 வீடுகள் உள்ளதுடன், சுமார் 50 வீடுகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியிலுள்ள வீடொன்றின், ஒளிரும் விளக்கு ஊடாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை தீயைக் கட்டுப்படுத்த சுமார் 10 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 18 தீயணைப்பு வீரர்கள் பயன்படுத்தப்பட்டதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த தீ விபத்து இன்று அதிகாலை 2.40 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், இந்த தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

அத்துடன் இதனால் எவருக்கும் காயங்களோ அல்லது உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.