முஸ்லிம் பெண்கள் அணியும் ‘ஹிஜாப்’ தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது அல்ல என்பதனால் அதனை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஹிஜாப் முகத்தையோ, ஒருவரின் அடையாளத்தையோ மறைக்காது என்பதனால் அதற்கு தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளதாக ‘டெய்லி மிரர்’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இருப்பினும், முகத்தை மறைக்கும் புர்கா மற்றும் நிகாப் ஆகியவற்றை தடை செய்ய நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான அனுமதி கிடைத்ததும் அது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பொது இடங்களில் பாதுகாப்பு காரணங்களுக்காக, முகத்தை அடையாளம் காணமுடியாத வகையிலான முகக் கவசங்களை அனுமதிக்கக்கூடாது என்பதே இவற்றை தடை செய்வதற்கான நோக்கமாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக தற்போது கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பதற்காக அணியும் முகக் கவசம் மற்றும் முகத்தை மறைக்கும் தலைக்கவசம் ஆகியவற்றை பொது இடங்களில் வேண்டுகோளின் பேரில் அகற்ற முடியுமாக உள்ள போதும், புர்கா மற்றும் நிகாப் போன்ற மத உடையை பொதுவில் அகற்ற முடியாது என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புர்காவை தடை செய்வதற்கான அமைச்சரவை பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளதாக கடந்த வாரம் அமைச்சர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.