July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘வடக்கு- கிழக்கு உட்பட மாகாண சபைத் தேர்தல்களை நடத்தி 13 ஐ அமுல்படுத்தவும்’: ஐநா புதிய வரைவுத் தீர்மானம்

இலங்கை அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என்ற அம்சம் புதுப்பிக்கப்பட்ட ஐநா வரைவுத் தீர்மானத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

இலங்கை மீதான புதுப்பிக்கப்பட்ட வரைவு தீர்மானம் ஐநா மனித உரிமைகள் பேரவையில் வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்’ என்ற தலைப்பில் பிரிட்டன், கனடா, ஜெர்மனி, மலாவி, மொண்டினீக்ரோ, வட மாசிடோனியா ஆகிய நாடுகள் இலங்கை மீது புதுப்பிக்கப்பட்ட வரைவை முன்வைத்துள்ளன.

வரைவில் இணைக்கப்பட்டுள்ள புதிய அம்சத்தில், ‘அரசியல் அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் உறுதிப்பாட்டை நிறைவேற்ற’ இலங்கை மீதான தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ள நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன.

அத்தோடு, இலங்கையின் வடக்கு, கிழக்கு உட்பட மாகாண சபைத் தேர்தல்களை நடத்தி, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை திறம்பட செயற்படுத்துவதை இலங்கை உறுதிசெய்ய வேண்டும் என்றும் வரைவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் அடிப்படையில் நாடுகள் மனித உரிமைகள் சார்ந்த பொறுப்புக்களை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் இலங்கை மீதான புதுப்பிக்கப்பட்ட வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது.