‘இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஊக்குவிக்க நிதியுதவி வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக’ பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
‘சில மாதங்களுக்கு முன்னர் பாணந்துறை – கெசல்வத்த பகுதியிலிருந்து போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் நபர் ஒருவர் பேலியகொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய சந்தேகநபரின் வங்கிக் கணக்குக்கு டுபாயிலிருந்து அதிகளவான பணம் அனுப்பப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த நிதியில் இருந்து ஒரு தொகுதி பணம் இஸ்லாம் அடிப்படைவாதத்தை ஊக்குவிப்பதற்காக சில அமைப்புகளுக்கு வழங்கியுள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இதற்கமைய சந்தேகநபரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக’ பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
‘இதனிடையே, சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்’ பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.