”நாட்டில் காணப்படும் சட்டங்களை மீறி வேறு சட்டங்களை பின்பற்றுமாறு மக்களை தூண்டும் அல்லது இனங்களுக்கு இடையே வெறுப்புணவர்களை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ளும் நபர்களை கைது செய்வதற்கு நாம் ஒருபோதும் தயங்க மாட்டோம்” என்று பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.
மஹரகமவ, மஹமேகாராமய விகாரையில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டின் சட்டத்தை தனி நபர்களின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப மாற்ற முடியாது எனவும், தேசிய பாதுகாப்புக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் சட்டங்களை திருத்துவதற்கான தேவை ஏற்படுமாயின், அத்தகைய சட்டங்கள் சட்ட வல்லுனர்களின் கவனத்திற்கு உட்படுத்தப்பட்ட பின்னர் திருத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மக்களுக்கும் மதத்திற்கும் இடையிலான ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு செயற்பாட்டுக்கு எதிராகவும் நடவடிக்கையெடுக்க தயாராக உள்ளோம் எனவும், இதனால் நாட்டின் சட்டத்தை பிரஜைகள் அனைவரும் மதிக்க வேண்டியது கட்டாயமாகும் என்றும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.