November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பௌத்தர்கள் வாரத்திற்கு ஒருமுறையாவது விகாரைக்கு செல்வது கட்டாயமாக்கப்பட வேண்டும்’

பௌத்தர்கள் வாரத்திற்கு ஒருமுறை அல்லது குறைந்தது பௌர்ணமி போயா நாட்களிலாவது விகாரைகளுக்கு செல்வது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன்,குழந்தைகளை அறநெறி பாடசாலைக்கு அனுப்புவதையும் கட்டாயப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புத்தளம் மாதம்பே கல்மூருவ ஸ்ரீ சுனன்தாராம விகாரையில் நடைபெற்ற சமய நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;

குழந்தைகளை அறநெறி பாடசாலைகளுக்கு (ஞாயிற்றுக்கிழமை) அனுப்புவதை கட்டாயமாக்க வேண்டும். மற்ற மதங்கள் அதைப் பின்பற்றுகின்றன.அவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலயங்களுக்கு செல்கிறார்கள்.

அத்துடன், இளம் வயது பிள்ளைகளை மத செயல்பாடுகளில் ஈடுபடச் செய்து அவர்கள் தவறான வழிகளில் செல்வதை தடுக்காவிட்டால்,பெரும் அழிவு ஏற்படும் என்றும் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.

பௌத்தர்களாக விகாரைகளுக்கு வருவதையும் கட்டாயமாக்க வேண்டும். ஒரு வாரத்திற்கு ஒரு முறை அல்லது குறைந்தது போயா நாட்களில் பௌத்தர்கள் விகாரைகளுக்கு வர வேண்டும்.

கிராமங்களில் உள்ள விகாரைகள் தான் கிராமத்தின் பிரதான கேந்திர நிலையங்களாகும். கிராம மக்களுக்கு விகாரைகளுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்குவதும் மக்களை நல்ல வாழ்க்கைக்கு பழக்கப்படுத்துவதும் தான் நமது பொறுப்பு.

இன்று நாம் ஜனாதிபதியின் தலைமையில் நாட்டை அபிவிருத்தி செய்ய உழைத்து வருகிறோம். நாட்டின் வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்து முறையாக மேற்கொள்ளப்படும் என்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.