‘ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசீம், புலனாய்வுப் பிரிவின் உளவாளி அல்ல’ என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
சஹ்ரான் அரச உளவாளி எனவும், அவருக்கு சம்பளம்கூட வழங்கப்பட்டுள்ளது எனவும் வெளியாகும் தகவல்கள் தொடர்பில் ஊடகங்களால் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
“சஹ்ரான் புலனாய்வுப்பிரிவின் உளவாளி அல்லன். எமது கொடுப்பனவுப் பட்டியலிலும் அவர் இல்லை. அவ்வாறு ஏதாவது தகவல் இருந்தால் உடன் சி.ஐ.டிக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். அதனைவிடுத்து வதந்திகளுக்கு உயிரூட்டக்கூடாது.
புலனாய்வுப் பிரிவினர், சஹ்ரானிடமிருந்து எந்தவொரு தகவலையும் பெறவில்லை.புலனாய்வு அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கவில்லை. எனவே, இத்தகைய குற்றச்சாட்டுகளை நிராகரிக்கின்றோம்.
அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க, சி.ஐ.டியிடம் சென்று அழுது புலம்பியுள்ளார். தனது அறிவிப்புக்கு மன்னிப்புக் கோரியும் உள்ளார். அவருக்கு எதிராக நிச்சயம் வழக்குத் தாக்கல் செய்யப்படும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.