தமிழ் இன அழிப்பு, மற்றும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வடக்கு-கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் எதிர்வரும் புதன்கிழமையன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணிக்கு ஆதரவு வழங்குவோம் என இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
தமிழ் இன அழிப்பு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் பொறுப்புக்கூறலை அரசு ஏற்றுக் கொள்ள வைப்பதற்கான பிரேரணையை எதிர்வரும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்ற வேண்டுமென்றும் சர்வதேச நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்து பல்கலை மாணவர்கள் பேரணியொன்றை நடத்துவதற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த வேண்டுகோளை ஏற்று அப்பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக மாவை சேனாதிராஜா அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘எம் தமிழினத்தின், தமிழர் தேசத்தின் விடுதலைக்காகவும், விடிவுக்காகவும் தமிழினத்தின் எதிர்காலச் சந்ததி, இளைய சமுதாயத்தின் அர்ப்பணமிக்க செயற்பாடுகளுக்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஆதரவு வழங்குவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில் அணி திரண்ட மக்கள் மீண்டும் பலத்தைக்காட்ட வேண்டும்.
ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை மீது முன்வைத்த மனித உரிமைப்பேரவை ஆணையாளரின் அறிக்கை மிகவும் காத்திரமானதாகும்’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையின் அடிப்படையில் இலங்கை மீது ஒரு தீர்மானம் பேரவையில் எடுக்கப்படுமானால், அதற்கு அப்பாலும் இலங்கையை சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு சிபார்சு செய்யப்படுமானால் அவை கணிசமான முன்னேற்றமாக அமையும்.
ஆனால் இலங்கை மீதான பேரவை ஆணையாளரின் அந்த அறிக்கையின் படி நிறைவேற்றக்கூடிய தீர்மானங்களை எடுப்பதற்குப் போதிய பெரும்பான்மையைப் பெறவேண்டும். அதற்கான இராஜதந்திர முயற்சிகள் இடம்பெறுகின்றன.
அதுவரை மனித உரிமைப் பேரவையில் எடுக்கக்கூடிய பொருத்தமான உச்சபட்ச தீர்மானங்களை நிறைவேற்றும் சந்தர்ப்பங்களை இழக்கக்கூடாது.
மனித உரிமைப் பேரவைத் தீர்மானங்கள் தொடர வேண்டும். பாதுகாப்புச்சபையில் நாம் தீர்மானித்து நிற்கும் தீமானங்களை நிறைவேற்றினாலும் அவற்றை நடைமுறைப்படுத்துவது இன்னொரு பாரிய சவாலாகும்.
அதுவரை நடைமுறையில் இலங்கையில் தமிழர் தேசம், தமிழ் மக்கள் பாதுகாக்கப்படுவதற்கு புதிய அணுகுமுறைகளும், பொறிமுறைகளும் வேண்டும்.
அந்த வகையில் எதிர்வரும் புதன்கிழமை பல்கலை மாணவர் அழைப்பினை ஏற்று அப்பேரணி வெற்றிபெற நாம் அனைவரும் ஒன்றுபடுவோம்’ எனவும் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.