பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா கிடைத்தாலும் தொழில் சலுகைகள் இல்லாமல்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் இடம்பெற்ற தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் மகளிர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
‘ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுத்துவிட்டோம் என சிலர் மார்தட்டிக் கொள்கின்றனர். ஆனால் 12 அல்லது 15 நாட்கள்தான் வேலை வழங்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இந்த விடயத்தால் தொழிலாளர்களுக்கான சலுகைகள் இல்லாமல் போகும். இதனால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு எவ்வாறு முகங்கொடுப்பது? எமது மக்களுக்கு உழைப்புக்கேற்ப ஊதியம் வேண்டும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ‘வேலை நேரம், வாக்குரிமை உட்பட தமக்கான உரிமைகளை பெண்கள் போராடியே வென்றெடுத்தனர்.
எனவே, பெண்களுக்கான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். குறிப்பாக பெருந்தோட்ட பெண் தொழிலாளர்கள் சம்பளத்துக்காக கூட போராடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது’ எனவும் திகாம்பரம் தெரிவித்துள்ளார்.