January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘விடுதலைப் புலிகள் மீதான தடையை பிரிட்டன் மீளாய்வு செய்ய வேண்டும்’: மேன்முறையீட்டு ஆணையம்

பிரிட்டனில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மீளாய்வு செய்யுமாறு ‘தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான மேன்முறையீட்டு ஆணையம்’ உள்துறை செயலாளர் பிரீத்தி பட்டேலுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு 2001 ஆம் ஆண்டு பிரிட்டனின் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவுற்றதைத் தொடர்ந்து, தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி ‘நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்’ 2018 ஆம் ஆண்டு மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தது.

அந்தக் கோரிக்கையை பிரிட்டன் அரசு ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து, ‘தடையை நீடிப்பதற்கு கூறப்பட்ட காரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை’ என்று மனுதாரர்களால் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனுவை விசாரணை செய்த தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான மேன்முறையீட்டு ஆணையம், ‘பிரிட்டன் அரசின் தீர்மானத்தில் தவறு இருப்பதாக’ கடந்த ஒக்டோபர் மாதம் தீர்ப்பளித்திருந்தது.

இந்நிலையில், தடையைப் புதுப்பிப்பதற்கான காரணங்களில் குறைபாடுகள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ள மேன்முறையீட்டு ஆணையம், உள்துறைச் செயலாளர் தீர்மானத்தை மீளாய்வு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேநேரம், தாம் தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான மேன்முறையீட்டு ஆணையத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும், மேன்முறையீட்டாளர்களின் இறுதிப் பதிலுக்காகக் காத்திருப்பதாகவும் உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.