மலையகத்தில் கல்வியை ஒதுக்கிவிட்டு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்தால், அவை பயன் தராது என்றும் கல்வி மேம்பாட்டுக்காக ஜீவன் தொண்டமானின் யோசனைகளை நிறைவேற்றுவோம் என்றும் திறன்கள் அபிவிருத்தி, தொழில் கல்வி இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல தெரிவித்துள்ளார்.
சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் கீழ் இயங்கும், தொண்டமான் தொழில் பயிற்சி நிலையத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான சந்திப்பில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வு, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, கல்வி திட்டங்கள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் யோசனைகளை தாம் மதிக்கின்றதாகவும், அவற்றை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல தெரிவித்துள்ளார்.
மலையகத்தின் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டால், மக்கள் எவருக்கும் அடிபணிய வேண்டிய நிலை ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்கள் கல்வியை இடைநடுவே கைவிடாது, பயிற்சி நிறைவுபெறும் வரை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சீதா அரம்பேபொல கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேநேரம், மலையகத்துக்கான பல்கலைக்கழகம் நுவரெலியா மாவட்டத்தில் அமையவுள்ளதாகவும், மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.