
இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்ற ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதேநேரம், மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்றைய தினம் திருகோணமலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அரசாங்கம் மாகாண சபைத் தேர்தல்களை நடத்தும் சட்டங்களை மாற்றி அமைத்துள்ளதாகவும், அது சட்டவிரோதமானது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனவே, சட்டத்தில் மாற்றம் செய்யாமல் தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும், தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்ற ஒப்புதல் பெறப்பட வேண்டும் எனவும் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.