தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அசாத் சாலியின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் 5 அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் ‘முஸ்லிம் சட்டங்களை யார் மாற்றினாலும் நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம், அரசாங்கம் சட்டம் இயற்றினாலும் அவற்றை கருத்தில் கொள்ளப்போவதில்லை’ என அசாத் சாலி கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அசாத் சாலியின் கருத்து தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
அசாத் சாலியின் கருத்து இனம், மதங்களுக்கு இடையே முரண்பாடுகளைத் தோற்றுவித்துள்ளதா என்பது தொடர்பான விசாரணைகளும் முன்னெடுக்கப்படுகின்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.