
தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் இந்தியா எப்போதுமே தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதில்லை, முழுமையான அரசியல் தீர்வு என்பதே இந்தியாவின் நிலைப்பாடாகும் என இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடிய போதே இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இதனை தெரிவித்துள்ளார்.
தமிழர்களுக்கான அமைதியான சூழலொன்றை உருவாக்கிக்கொடுக்கவும், அரசியல் ரீதியில் தீர்வுகளை பெற்றுக்கொடுக்கவும் இந்தியா தொடர்ச்சியாக நடவடிக்கைகளை எடுக்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
இந்த விடயங்களை அரசாங்கத்துடன் பேச முன்னர் தமிழர் தலைமைகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி அதனூடாக தமிழ் மக்களின் நிலைப்பாட்டை பெற்றுக்கொண்டு அரசாங்கத்திடம் சரியான காரணிகளை கொண்டு சேர்க்க தயாராக உள்ளதாகவும் உயர் ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது, தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் போராட்டம் இன்னமும் நியாயமான தீர்வொன்றை நோக்கி நகரவில்லை என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரசியல் தீர்வு மற்றும் நல்லிணக்க விடயத்தில் குறைந்தபட்சம் இந்தியா முன்வைத்த 13 ஆவது திருத்த சட்டத்தை கூட முழுமையாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் விரும்பவில்லை என்பதையும் உயர்ஸ்தானிகரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எடுத்துரைத்தனர்.
அதேபோல், 13 ஆவது திருத்த சட்டம் அரசியல் தீர்வு இல்லை என்பதை தாம் ஏற்றுக்கொள்கின்ற போதிலும் அதனூடாக தற்காலிக தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும்.இந்த விடயத்தில் இந்தியா தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் இந்திய உயர்ஸ்தானிகரிடம் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.