ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் இந்தியா தொடர்ந்தும் அவதானித்து வருவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் இலங்கையின் நகர்வுகளை கண்காணிப்பதாகவும் ஜெனிவா விவகாரங்களை அவதானமாகக் கையாளவே இந்தியா நினைக்கின்றது எனவும் இந்திய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது, ‘தமிழர்கள் குறித்த விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு எப்போதும் ஒன்றாகவே இருக்கும். நிச்சயமாக இந்தியா இந்த விடயங்களில் அழுத்தங்களை பிரயோகித்து தீர்வுகளுக்கு துணை நிற்கும்’ என்ற வாக்குறுதியையும் அவர் வழங்கியுள்ளார்.
இதேவேளை ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இந்தியா ஆற்றிய உரைக்கு உயர்ஸ்தானிகரிடம் சிறிதரன் எம்பி நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.
அத்துடன் இந்த விடயத்தில் இந்தியாவின் ஒத்துழைப்பு தமிழர்களுக்கு கிடைக்க வேண்டும் எனவும் உயர்ஸ்தானிகரிடம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.