May 23, 2025 16:09:29

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெளிவிவகார அமைச்சின் பிராந்திய கொன்சியூலர் அலுவலகம் திருகோணமலையில் திறப்பு

கிழக்கு மாகாணத்திற்கான பிராந்திய கொன்சியூலர் அலுவலகம் அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் திருகோணமலை உள்ளகத் துறைமுக வீதியில் திறந்து வைக்கப்பட்டது.

வெளிவிவகார அமைச்சின் கீழ் இயங்கும் இந்த அலுவலகத்தின் ஊடாக வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அதனோடு தொடர்புடைய சகல சிக்கல்களும் தீர்த்து வைக்கப்படவுள்ளன.

“பொதுமக்களுக்கு வழங்கும் சேவைகளின் செயற்றிறனை மேம்படுத்துவதன் மூலமாக நாட்டைக் கட்டியெழுப்பும் செழிப்பான பார்வை”´ என்ற அரசாங்கத்தின் தேசிய கொள்கைக்கு அமைய இந்த அலுவலகம் செயற்படவுள்ளது.

‘திருகோணமலையில் பிராந்திய அலுவலகம் திறக்கப்பட்டதனால் கிழக்கு மாகாணம் மற்றும் அதன் அண்மித்த பகுதிகளில் உள்ளவர்கள் கொழும்பில் உள்ள கொன்சியூலர் அலுவலகத்திற்குச் செல்லாமல் சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக’ வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இதன்போது தெரிவித்துள்ளார்.

‘பிராந்திய கொன்சியூலர் அலுவலகம் ஊடாக பிறப்பு, திருமணம், இறப்புச் சான்றிதழ்கள் மற்றும் கல்விச் சான்றிதழ்கள் ஆகியவற்றை சான்றுறுதிப்படுத்தல், வெளிநாடுகளில் இறந்த இலங்கையர்களின் உடல்களை நாட்டிற்கு கொண்டுவருதல் போன்ற பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக’ இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

‘அத்தோடு இந்த அலுவலகம் வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு உதவிகளை வழங்குவதுடன், நிவாரணம் மற்றும் இழப்பீட்டுக் கோரிக்கைகளை எளிதாக்கும்’ எனவும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.