எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் சுகாதார கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கையெடுக்காவிட்டால் நாட்டில் மூன்றாவது கொரோனா அலை உருவாகலாம் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்றுவதிலிருந்து விலகிச் செயற்படுவதாகவும், இந்த நிலைமை தொடருமாக இருந்தால் மே மாதமளவில் மூன்றாவது கொரோனா அலையை சந்திக்க நேரிடும் என்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது கொரோனா தொற்றுப் பரவல் குறைவடைந்துள்ள போதும், பிரேசில் உள்ளிட்ட உலக நாடுகளில் கொரோனா தொற்று கட்டுபடுத்த முடியாத அளவிற்கு சடுதியாக அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சூழ்நிலையில், அரசாங்கமும் சுகாதார அமைச்சும் பண்டிகை காலத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகளை முன்னெடுக்கத் தவறினால் மே மாதமளில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகக் கூடிய நிலைமை ஏற்படும் என்பதுடன் அதிக உயிரிழப்புகளும் ஏற்படலாம் என்றும் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.