July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதாவோருக்கு புனர்வாழ்வு: வர்த்தமானி வெளியானது

இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபர்களை புனர்வாழ்வளிப்பதற்கான புதிய விதிமுறைகளை உள்ளடங்கிய விசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் கையெழுத்துடன் குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியாகியுள்ளது.

அந்த வர்த்தமானி அறிவித்தலுக்கமைய மத அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக கைதுசெய்யப்படும் சந்தேக நபரை 24 மணித்தியாலங்களுக்குள் அண்மையில் உள்ள பொலிஸ் நிலையயத்தில் ஒப்படைக்க வேண்டும்.

அதனை தொடர்ந்து அந்த நபர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு முன் அந்த விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சருக்கும், பொலிஸ்மா அதிபருக்கும் அறிக்கையொன்றை சமர்ப்பிக்க வேண்டும்.

குறித்த சந்தேக நபர் மத அடிப்படைவாத மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால் அதுதொடர்பில் சட்டமா அதிபருக்கு அறிவுறுத்த வேண்டும்.

இதன்படி, அந்த நபரை புனர்வாழ்வளிப்பதற்கு சட்டமா அதிபர் தீர்மானித்தால் அந்த உத்தரவுக்கான எழுத்து மூலமான ஆவணத்துடன் சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்.

இதன்போது நீதவானால் சந்தேக நபரை ஒரு வருடத்துக்கு உட்பட்ட காலத்துக்கு புனர்வாழ்வளிக்க உத்தரவு பிறப்பிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சந்தேக நபரின் குற்றத்திற்கான வழக்கினை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியும் எனவும் குறித்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.