பல்வேறு தரப்பினர்கள் தமது குடும்பத்தில் குழப்பங்களை உருவாக்க முயற்சிப்பதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவ்வாறு இந்தக் குடும்பத்திற்குள் யாராலும் குழப்பங்களை ஏற்படுத்திவிட முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களை கொண்ட மாகாண சபை மன்றத்துடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ஷ நமக்கு மட்டுமல்ல, முழு ஆசியாவிலும் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவர் என்பதனை அனைவரும் அறிவர். அவருடைய அரசியல் அறிவை யாரும் நெருங்க முடியாது. அத்தகைய தலைவர் ஒருவர் நாட்டை வழிநடத்துவது ஒரு பெரிய பாக்கியம் என்று நான் கருதுகிறேன் என்று இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று, பசில் ராஜபக்ஷ இந்த நாட்டில் ஒரு அரசாங்கத்தை உருவாக்கிக் கொடுப்பத்தில் முன்நின்று செயற்பட்டார் என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும். அத்தகைய இரண்டு தலைவர்களுடன் அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வது மிகவும் எளிதானது என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.
இதேவேளை தனது நியமனங்களில் மகிந்த ராஜபக்ஷ ஒருபோதும் அழுத்தங்களை கொடுத்ததில்லை என்றும், அதேபோன்று பஸில் ராஜபக்ஷவும் அந்த விடயங்களில் தலையிட்டதில்லை என்றும் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, இவர்களின் ஒத்துழைப்புடன் நாட்டை எந்தவாரு நெருக்கடியும் இல்லாமல் முன்நோக்கி கொண்டு செல்வோம் என்று தைரியமாக கூறுகிறேன் என்றும் கூறியுள்ளார்.