யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களுக்கும் சென்று நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் இந்திய உயர்ஸ்தானிகர், இன்றையதினம் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கட்சி ரீதியாக தனித்தனியாக சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு யாழ். கொக்குவிலில் உள்ள ஹோட்டலொன்றில் நடைபெற்றது.
இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சிகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதில் கூட்டமைப்பு சார்பில் தமிழரசுக்கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவஞானம் சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருடன் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
அதேபோன்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் சார்பில் அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன், என்.சிறிகாந்தா, எம்.கே.சிவாஜிலிங்கம், ஆனந்தி சசிதரன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.