November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“விமர்சிப்பவர்கள் விமர்சிக்கட்டும், தீர்மானம் நிறைவேறியே தீரும்”

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை மீது திருத்தங்களுடன் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை வரைவு கனதியாகவே உள்ளது. இதை விமர்சிப்பவர்கள் விமர்சிக்கட்டும். ஆனால், இந்த வரைவு ஐ.நா. உறுப்புரிமை நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறியே தீரும். இது எமது அசைக்க முடியாத நம்பிக்கை.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

“வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினைகள், அரச படைகளால் தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட கொடூரங்கள் ஆகியவற்றுக்கு தீர்வு காணும் வகையில் ஐ.நா. பிரேரணையின் புதிய வரைவில் பரிந்துரைகள் முன்மொழியப்பட்டுள்ளன.

பிரிட்டன் தலைமையில் முன்வைக்கப்பட்டுள்ள இந்தப் பிரேரணைக்கு பல நாடுகள் ஆதரவு வழங்க முன்வந்துள்ளன.

பல நாடுகளின் தூதுவர்களுடன் நாம் பேச்சுக்களை நடத்தி பிரேரணைக்கு ஆதரவு வழங்குமாறும் கோரியுள்ளோம்.

அதேவேளை, பிரேரணைக்கு ஐ.நா. உறுப்புரிமை நாடுகளின் ஆதரவைக் கோரி பகிரங்க அறிக்கையொன்றையும் நாம் வெளியிட்டுள்ளோம்.

எனவே, இந்த வரைவு உறுப்புரிமை நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறியே தீரும். இது எமது அசைக்க முடியாத நம்பிக்கை” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.