நாட்டில் முஸ்லிம் அடிப்படைவாதத்தை தூண்டும் கருத்துக்களை அசாத் சாலி தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றார். ஷரியா சட்டத்தை நாட்டிற்குள் பரப்ப நினைக்கும் அவர் ஓரிரு நாட்களில் கைது செய்யப்படுவார் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
‘முஸ்லிம் சட்டங்களை யார் மாற்றினாலும் நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம், அரசாங்கம் சட்டம் இயற்றினாலும் அவற்றை கருத்தில் கொள்ளப்போவதில்லை’ என அசாத் சாலி கூறியுள்ள கருத்து தொடர்பில் அமைச்சர் சரத் வீரசேகர தனது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
‘ஷரியா சட்டம் அவருக்கு வேண்டுமென்றால் அவர் சவூதி அரேபியாவிற்கு செல்ல வேண்டும்.இலங்கையில் ஷரியா சட்டத்திற்கு இடமில்லை. இலங்கை ஒரு சட்டத்தின் கீழ் இயங்க வேண்டும். இவர்கள் நினைத்தால் போல் தமக்கு தேவையான சட்டங்களை இயற்றிக்கொண்டு இருக்க முடியாது.
இலங்கையில் இருந்து ஷரியா சட்டத்தை நியாயப்படுத்தும் அவரை நாளை அல்லது நாளை மறுதினம் கைது செய்ய நடவடிக்கை எடுப்பேன்.
இதற்கு முன்னர் அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் இவ்வாறு கூறி சிறைக்கு சென்றுள்ளார். பின்னர் வீரர் போன்று வெளியில் வருவார். ஆனால் இம்முறை அது நடக்காது. அவரின் ஆழ்மனதில் அடிப்படைவாத கொள்கை உள்ளது. எனவே அவர் கைது செய்யப்படுவார்’ என சரத் வீரசேகர மேலும் தெரிவித்துள்ளார்.