ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் புத்தளம் மத்ரஸா பாடசாலையின் அதிபர் சலீம் கான் மொஹமட் ஸாகீர் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகை சட்டமா அதிபரினால் புத்தளம் மேல் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புத்தளம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்வதற்காக சட்டமா அதிபரால் இந்த குற்றப்பத்திரிகை அனுப்பப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டம்,சர்வதேச குடியுரிமை மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொண்ட பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பை பேணியமை மற்றும் புத்தளம் பிரதேசத்தில் மத்ரஸா பாடசாலையொன்றினுள் தீவிரவாதம் கற்பித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.