இலங்கைக்கு மேலும் கால அவகாசத்தை வழங்கி, பொறுப்புக் கூறலை நீர்த்துப் போகச் செய்யும் வகையில், ஐநாவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானம் அமைந்துள்ளதாக ‘நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்’ அமைப்பு தெரிவித்துள்ளது.
அதேநேரம் இந்தத் தீர்மான வரைவினை முற்றாக நிராகரிப்பதாகவும் நீதிக்காக போராடும் தமிழர் தேசத்துக்கு இது பெருத்த ஏமாற்றத்தை தருவதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ‘நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்’ அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதில், எமக்கான நீதியினை வென்றெடுப்பதற்கு ஜெனிவாவுக்கு அப்பாலும், புதிய புதிய களங்களை நோக்கி நாம் செயற்பட வேண்டியவர்களாக இருப்பதோடு, ஐநாவில் வாக்கெடுப்புக்கு முன்னராக தீர்மான வரைவில் திருத்தங்களை கொண்டுவரக்கூடிய தீவிரமான செயல் முனைப்பிலும் ஈடுபடவுள்ளோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமது தீர்மானம் தொடர்பான வரைபை பிரித்தானியா தலைமையிலான கூட்டு நாடுகள் சமர்ப்பித்திருந்த நிலையில் எதிர்வரும் 22, 23ஆம் திகதிகளில் அது வாக்கெடுப்புக்கு வரலாம் என கூறப்படுகின்றது.