July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சுய தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீள் பரிசீலியுங்கள் ‘ : மனோ கணேசன்

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புகின்ற இலங்கையர்கள் தொடர்பில் அரசாங்கம் பின்பற்றி வருகின்ற 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தல் உள்ளிட்ட கொவிட் – 19 சுகாதார விதிமுறைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் கொவிட் -19 தடுப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளேயிடம் அவர் நேற்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

தொழில் காரணமாகவோ அல்லது விடுமுறை நோக்கிலோ வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள இலங்கையர்கள், தாம் இன்று வாழும் நாட்டில் தடுப்பூசிகள் இரண்டையும் பெற்று இருப்பார்கள் என்றால் அவர்கள் நாடு திரும்பும் போது, தமது சொந்த வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்க வேண்டும்.

ஐந்து அல்லது மூன்று நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வைப்பது, அதற்கான கட்டண நிர்ணயம், வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பும் போது அறிவிடப்படுகின்ற விமான பயணச்சீட்டு கட்டணம் ஆகியவை தொடர்பில் பல முறைகேடுகள் நடைபெறுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அதேபோல, அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்படும் இலங்கையர்கள், சரியான முறையில் கவனிக்கப்படுவதில்லை. எல்லா இடங்களிலும் முறைகேடுகள் இடம்பெறுகின்றன.

அதுமாத்திரமின்றி, வெளிநாடுகளுக்குச் சென்று தொழில் புரிந்துவிட்டு அதன்மூலம் இந்நாட்டுக்கு அந்நியச் செலவாணியை பெற்றுக் கொடுத்த பலர் இன்று தொழில்களை இழந்து, பெரும் பொருளாதார சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ளார்கள்.

எனவே கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். ஏனையோர் சொந்த வீடுகளில், சுகாதார பரிசோதகர்களின் கண்காணிப்பின் கீழ் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்ப்படுத்தப்பட வேண்டும். உலகின் பல நாடுகளில் இந்த நடைமுறை தான் தற்போது பின்பற்றப்பட்டு வருகின்றது என தெரிவித்துள்ளார்.

எது எவ்வாறாயினும், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, குறித்த விடயம் தொடர்பில் இதுவரை எந்தவொரு இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.