November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் தேசியக் கொடி பதியப்பட்ட கால் துடைப்பான், பாதணி விளம்பரங்களுக்கு எதிராக நடவடிக்கை!

இலங்கையின் தேசியக் கொடியின் உருவத்துடன் வடிவமைக்கப்பட்ட கால் துடைப்பான் மற்றும் பாதணிகள் இணையதளத்தில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உலகளாவிய ரீதியில் இணையத்தின் ஊடாக பொருட்களை விற்பனை செய்யும் முன்னனி நிறுவனமொன்று தனது இணைய பக்கத்தில் இந்த விளம்பரத்தை வெளியிட்டிருந்தது.

சீனாவை தளமாக கொண்ட நிறுவனம் ஒன்றினால் இந்த பொருட்கள் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து, சீனாவை தளமாகக் கொண்ட வீட்டுப் பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தை தொடர்பு கொள்ளுமாறு வெளிவிவகார செயலாளர் கலாநிதி ஜயனாத் கொலம்பகே சீனாவிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.

கால் துடைப்பான் 12 அமெரிக்க டொலருக்கும் பாதணிகள் 20 டொலருக்கும் விற்பனை செய்யப்படுவதாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன.

அத்தோடு இவற்றின் விநியோக கட்டணமாக 9 மற்றும் 10 டொலர்கள் அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு இலங்கையில் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த இணையத்தில் இருந்து அந்த விளம்பரங்கள் நீக்கப்பட்டுள்ளன.

குறித்த இணைத்தளத்தில் இலங்கை உட்பட பல நாடுகளின் கொடிகள் இவ்வாறு வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு விடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதேவேளை இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாகவும், இது தொடர்பாக நடவடிக்கையெடுக்கப்படும் என்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.