
வவுனியா வடக்கு நெடுங்கேணி வெடிவைத்தகல் கிராமத்திற்குள் செல்வதற்கு இராணுவத்தினரும், வனவள திணைக்களத்தினரும் தமக்கு தடைவிதித்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கிராமத்தில் வசிக்கும் மக்கள் தங்களது காணிகளுக்கான உறுதிப்பத்திரங்களை வைத்துள்ள போதும், அப்பகுதிக்குள் உட்செல்வதற்கோ காணிகளை துப்பரவு செய்யவோ அனுமதி வழங்கப்படாது இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் குறித்த கிராமத்திற்குள் இருக்கும் அம்மன் ஆலயத்தில் ஒவ்வொரு வருடமும் பங்குனி திங்கள் உற்சவத்தினை நடாத்துவதற்கு மட்டும் ஆலய வளாகத்தினை சுத்தப்படுத்துவதற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்தக் கிராமத்தில் 65 குடும்பம் வசித்து வந்த நிலையில் தற்போது 15 குடும்பங்கள் மட்டுமே தமது சொந்த காணிக்குள் குடியேறுவதற்கு கிராம சேவையாளர் மற்றும் பிரதேச செயலாளரின் அனுமதி கடிதத்தினை இராணுவம், வனவள திணைக்களத்தினருக்கு வழங்கியிருந்தது.
இந்நிலையில் கிராமத்தில் உள்நுழைவதற்கான அனுமதிப் பத்திரத்துடன் குறித்த பகுதி மக்கள் தம் சொந்த காணிகளை துப்பரவு செய்ய சென்ற போதே இராணுவத்தினர் இவ்வாறு தடைவிதித்துள்ளனர்.
குறித்த பகுதிக்குள் பொதுமக்கள் உட்செல்ல இராணுவத்தினர் தடை விதித்து வரும் நிலையில் இது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் முறையிட்ட போதும், நீதி கிடைக்கவில்லை என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.