
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவில் அபிவிருத்தித் திட்டங்கள் முக்கிய விடயமாக உள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே தெரிவித்துள்ளார்.
மன்னார் மடு தேவாலய பகுதிகளில் யாத்திரிகர்களுக்கான தங்குமிட விடுதியை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது.
அந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
‘கொவிட்-19 தொற்றினால் பொருளாதாரத்தை முன்னேற்றுவதில் பாரிய முயற்சிகளை நாங்கள் முன்னெடுத்து வருகின்றறோம். அந்தவகையில் இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கமான உறவைப் பேணி வருகின்றோம். வீட்டுத்திட்டங்களை வழங்கியதுடன், சுகாதாரத் துறைக்கும் பங்களிப்பை மேற்கொண்டுள்ளோம்’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு இலங்கைக்கு உதவிகளை வழங்கியுள்ளமை தொடர்பில் இந்திய அரசாங்கம் மகிழ்ச்சி அடைவதாகவும் இதன்போது அவர் தெரிவித்துள்ளர்.
இந்த நிகழ்வில், மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான், கே.திலீபன், இலங்கைக்கான இந்திய துணைதூதுவர் எஸ்.பாலசந்திரன் , உட்பட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.