இறக்குமதி செய்யப்படும் சீனிக்கான வரி குறைக்கப்பட்டமை ஊடாக அரசாங்கத்திற்கு 15.9 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து ஜேவிபியினால் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அரசாங்கத்திற்கு பெருமளவு நஷ்டத்தை ஏற்படுத்தியமை மூலம் மக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும், இதனால் இதனுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடுமாறும் கோரி, ஜேவிபியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹதுன்நெதி இன்று உயர்நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
மனுவின் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி செயலாளர் பி.பி.ஜயசுந்தர, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நூஷாட் பெரேரா, நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் சாந்த திஸாநாயக்க மற்றும் சீனி இறக்குமதி நிறுவனத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட 9 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
சீனி இறக்குமதியின் போது கிலோ ஒன்றுக்கு அரசாங்கம் விதித்திருந்த 50 ரூபா இறக்குமதி வரி 2020 ஒக்டோபர் 13 ஆம் திகதி 25 சதமாகக் குறைக்கப்பட்டது.
இதனையடுத்து, நவம்பர் 2 ஆம் திகதி வர்த்தகர் ஒருவர் 20,000 மெட்ரிக் தொன் சீனியையும், நவம்பர் 25 ஆம் திகதி 37,000 மெட்ரிக் தொன் சீனியையும் அதன்பின்னர் ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் சீனியையும் இறக்குமதி செய்துள்ளார்.
இதன்பின்னர் மீண்டும் சீனி இறக்குமதிக்கான வரியை 40 ரூபாவாக உயர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுத்திருந்தது.
இந்நிலையில் வரியை குறைத்தமை ஊடாக அரசாங்கத்திற்கு 15.9 பில்லியன் ரூபா நஷ்ட்டம் ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சினால் பாராளுமன்றத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி ஜேவிபி இன்று உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளது.