May 29, 2025 11:39:23

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நுவரெலியா இராகலை தோட்டத்தில் தீ விபத்து: 16 வீடுகளுக்கு சேதம்!

நுவரெலியா இராகலை தோட்டத்தில் லயன் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 வீடுகள் சேதமடைந்துள்ளன.

இன்று அதிகாலை இந்த தீ விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட 14 குடும்பங்களை சேர்ந்த 61 பேர் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிகாலை 3.45 மணியளவில் குறித்த லயன் குடியிருப்பில் திடீரென தீ பரவிய நிலையில், பிரதேசவாசிகள் தீயணைப்பு பிரிவினருடன் இணைந்து சில மணி நேரத்தில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந்த தீவிபத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படாதபோதிலும், பெருமளவில் பொருட்களுக்கு தேசங்கள் ஏற்பட்டுள்ளன.

இவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகமும், அனர்த்த முகாமைத்துவ நிலையம், நுவரெலியா பிரதேச சபை ஆகியன ஊடாகவும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கும் இராகலை பொலிஸார், நுவரெலியா தடயவியல் பிரிவினருடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.